BREAKING NEWS

கலகலக்கப் போகும் மெரினா? அழகிரி திட்டம்!

கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் பேசிய, முன்னணி நிர்வாகிகள் அனைவரும், ‘தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்; அவரது தலைமையில், நாங்கள் அணிவகுப்போம்’ என, சூளுரைத்தனர்.

ஆனால், அழகிரி, மீண்டும் தன்னையும், தன் ஆதரவாளர்களையும், கட்சியில் சேர்க்க வேண்டும் என,குடும்பத்தினர் சிலரின் உதவியுடன் வலியுறுத்தி வருகிறார். அதற்கு, ஸ்டாலின் மறுத்து விட்டார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தன் ஆதரவாளர்களிடம், அழகிரி ஆலோசனை நடத்தினார்.’தனிக் கட்சி துவக்கினால், தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது; எனவே, போட்டி தி.மு.க.,வை உருவாக்கலாம்’ என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதுரையில், நேற்று அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் பங்கேற்ற ரகசிய கூட்டத்தில், கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

இந்த பேரணி, சென்னை, அண்ணா சாலையிலுள்ள அண்ணாதுரை சிலை யிலிருந்து புறப்பட்டு, கருணாநிதி சமாதி சென்ற டையும்.இதில், அழகிரியின் பலத்தை காட்டு வதற்கு, தமிழகம் முழுவதும் இருந்து, 50 ஆயிரம் பேரை திரட்டுகின்றனர்.

இது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த #மதுரை_மாநகர_முன்னாள்_துணைமேயரும் , முக அழகிரியின் தீவிர ஆதரவாளருமான பி.எம்.மன்னன் அவர்களைத் தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்ததாவது,

கலைஞரின் நினைவிடத்துக்கு திமுகவின் துணை அமைப்புகள் தினந்தோறும் அமைதிப் பேரணி சென்றுகொண்டிருக்கிறார்கள். அழகிரியோ தனது ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் திரட்டி கலைஞரின் நினைவிடம் நோக்கி தன் தலைமையில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்திருக்கிறார்.

“கலைஞரின்” காரியம் முடியுற வரைக்கும் பொறுமையா இருக்கலாம்னு நினைத்திருந்தார் அண்ணன். ஆனா அதுக்குள்ளயே செயற்குழுவை பொதுக்குழு மாதிரி கூட்டி அதுலயும் ஸ்டாலின் தன்னை முன்னிலைப் படுத்திக்கிட்டாரு. தலைவர் இல்லைனு ஆகிப்போச்சு. பொதுச் செயலாளர்தான் மூத்தவர். அவர் தலைமையில்தான கலைஞருக்கு இரங்கல் செயற்குழு கூட்டம் நடந்திருக்கணும்? ஆனா ஸ்டாலின் தலைமையில நடக்குது. இந்த அறிவிப்பு வந்தபிறகு அண்ணனுக்கு கடும் மனவருத்ததை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து எங்களிடம் “திமுக வைக் காப்பாற்ற நாம் களமிறங்க வேண்டும்” ஸ்டாலினை நம்பி கட்சியை ஒப்படைத்தால் “நாளை கலைஞரின் ஆத்மா நம்மை மன்னிக்காது” என்று வருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தார். இறுதியாக அண்ணன் அவருக்கு நெருக்கமான உச்ச நட்சத்திரத்துடன் கலந்தாலோசித்து செப்டம் 5 ல் கலைஞரின் 30 வது நாள் காரியத்தை மிக பிரம்மாண்ட பேரணி நடத்தி கலைஞரின் அரசியல் வாரிசு அழகிரி தான் என்பதை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளார்…

கட்சியிலேர்ந்து நீக்கி சில வருஷம் ஆகியிருந்தாலும். தமிழ்நாடு முழுவதிலும் அவருக்கென தனியாக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உண்டு, மாதந்தோறும் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியே வந்துள்ளோம், இப்போது கலைஞர் இல்லாத நிலையில் ஸ்டாலினாலும் சரியாக செயல்பட முடியாமல் தொடர் தோழ்விகளைக் கண்டு வரும் திமுகவுக்கு புத்தியிரூட்ட #அஞ்சா_நெஞ்சரின் ஆதரவாளர்களைத் திரட்ட முடிவு செய்துள்ளோம்.

அதன்படி வேலைகள் தொடங்கிவிட்டன. அழகிரியோடு இன்னும் தொடர்பில் இருக்கும் மாவட்ட திமுக பிரமுகர்கள், அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் லோக்கல் எதிர்கோஷ்டியினர் என்று பலரிடமும் மாவட்டம் மாவட்டமாக பேச ஆரம்பித்துவிட்டனர் அழகிரி ஆதரவாளர்கள். மெரினா கலைஞர் நினைவிடம் நோக்கி அழகிரி தலைமையில் பேரணி செல்வதற்காக இன்னும் சில தினங்களில் போலீஸிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள்.

இப்போதைக்கு செப்டம்பர் 5 என்று தேதி பொதுவாக முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அதில் இருந்து சில நாட்கள் முன் பின்னே இந்த பேரணி நடக்கலாம். ’22 ஆம் தேதி அண்ணன் மதுரை திரும்புகிறார். அப்புறம்தான் தேதி முடிவாகும்’ என்றார் மதுரையின் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன்.

கடந்த ஜுன் மாதம் நடந்த மன்னனின் மகள் திருமண விழாவின் போது “செயல்படாத தலைவர் சென்னையில் இருக்கிறார், ஆனால் செயல்படும் தொண்டர்கள் என்பக்கமே இருக்கிறார்கள் என்று அழகிரி பேசியது குறிப்பிடத்தக்கது!

Share this:

Post a Comment

 
Copyright © 2014 நம்நாடு செய்திகள். Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates